விழுப்புரம் மாவட்டத்தில் 16¾ லட்சம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் மோகன் வெளியிட்டார்


விழுப்புரம் மாவட்டத்தில்  16¾ லட்சம் வாக்காளர்கள்  வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் மோகன் வெளியிட்டார்
x
தினத்தந்தி 9 Nov 2022 6:45 PM GMT (Updated: 9 Nov 2022 6:46 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் மோகன் வெளியிட்டார். இதில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 16,82,587 வாக்காளர்கள் உள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் 1.1.2023 தேதியை தகுதிஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி நேற்று முதல் தொடங்கியது. அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை நடைபெறும் இப்பணியில் 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இதரப்பணி மேற்கொள்வதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் பணி கால அட்டவணை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

16,82,587 வாக்காளர்கள்

கடந்த 5.1.2022 அன்று வரை இறுதி வாக்காளர் பட்டியலில் 8,52,229 ஆண் வாக்காளர்களும், 8,75,639 பெண் வாக்காளர்களும், 218 மூன்றாம் பாலினத்தினரும் என மொத்தம் 17 லட்சத்து 28 ஆயிரத்து 86 வாக்காளர்கள் இருந்தனர். படிவம் 7 மூலம் பெயர் நீக்கம் கோரியவர்கள், இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள், 2 இடங்களில் பெயர் உள்ளவர்கள் ஆகியவை தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 23,972 ஆண் வாக்காளர்களும், 28,022 பெண் வாக்காளர்களும், 16 மூன்றாம் பாலினத்தினரும் என மொத்தம் 52,010 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது. மேலும் 2,476 ஆண் வாக்காளர்களும், 4,028 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7 பேரும் என மொத்தம் 6,511 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டனர். இதன் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 8,30,733 ஆண் வாக்காளர்களும், 8,51,645 பெண் வாக்காளர்களும், 209 மூன்றாம் பாலினத்தினரும் என மொத்தம் 16,82,587 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வாக்காளர் பட்டியல் வருவாய் கோட்டாட்சியர், சப்-கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா, நகராட்சி அலுவலகங்கள், நியமன வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள பதிவு பெற்ற இணையதள தேடல் மையங்களின் மூலமாகவும், இந்திய தேர்தல் ஆணையம் இணையதளம் (www.nvsp.in) மூலமாகவும் வாக்காளர்களாக பெயர்கள் பதிவு செய்யப்பட்ட விவரத்தை சரிபார்த்துக்கொள்ளலாம்.

ஒத்துழைப்பு

பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில், வேலை நேரங்களில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண் 1950-யை தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல் சம்பந்தமான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் தகுதியானவர்களிடம் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை பெறப்படும். இதற்காக சிறப்பு முகாம்கள் வருகிற 12, 13-ந் தேதிகளிலும், 26, 27-ந் தேதிகளிலும் (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. இம்முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் கொடுத்துக்கொள்ளலாம். கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்களை 26.12.2022 அன்று முடிவு செய்து இறுதி வாக்காளர் பட்டியல் 5.1.2023 அன்று வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மகாராணி, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார், தனி தாசில்தார் (தேர்தல்) உஷா, அரசியல் கட்சியினர் சார்பில் புகழேந்தி எம்.எல்.ஏ., தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, அ.தி.மு.க. நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் சுகுமார், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ், தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story