விழுப்புரம் கன்னியம்மன் கோவிலில் தீ மிதி விழா ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
விழுப்புரம் கன்னியம்மன் கோவிலில் தீ மிதி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழுப்புரம் கே.கே.சாலையில் மிகவும் பிரசித்தி பெற்ற கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டு 53-வது ஆண்டு ஆடிப்பெருவிழா கடந்த 12-ந் தேதி காலை பந்தக்கால் நட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 14-ந் தேதி சக்தி அழைத்தலும், காப்பு கட்டுதலும், 19-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 20-ந் தேதி வடபத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து தாய் வீட்டு சீர்வரிசையுடன் அக்னிகரகம், தீச்சட்டியுடன் கன்னியம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு வீரவாழி மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம், கன்னியம்மன் கோவிலை வந்ததடைந்ததும் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மதியம் 2 மணிக்கு விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து கரகம் ஜோடித்து வந்து அலகு குத்தி செடல் உற்சவம் நடைபெற்றது.
தொடர்ந்து, மாலை 7 மணிக்கு தீமிதி விழா நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் இறங்கி பயபக்தியுடன் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் இரவு 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கன்னியம்மன் சாமி வீதியுலா நடைபெற்றது.