விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு தூய்மையாக பராமரிக்காமல் இருந்த சுகாதார ஆய்வாளரை தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவு


விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு தூய்மையாக பராமரிக்காமல் இருந்த சுகாதார ஆய்வாளரை தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவு
x

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தூய்மையாக பராமரிக்காமல் இருந்த சுகாதார ஆய்வாளரை தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் மோகன் நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கழிவறை கட்டிடங்களை பார்வையிட்டு பூட்டிக்கிடந்த கழிவறை கட்டிடத்தை ஒரு வார காலத்திற்குள் சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் மற்ற கழிவறை கட்டிடங்களை முறையாக பராமரிக்காததாலும், பஸ் நிலைய உள்பகுதியை தூய்மையாக பராமரிக்காமல் இருந்ததற்காகவும் அங்கு பொறுப்பில் உள்ள சுகாதார ஆய்வாளரை உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யும்படி நகராட்சி ஆணையருக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டதுடன், நகராட்சியில் இதுபோன்று தவறுகள் நடைபெறுவது கண்டறிந்தால் நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

விழிப்புணர்வு ஓவியங்கள்

அதன் பின்னர் பஸ் நிலையத்தில் உள்ள சுவர்களில் தூய்மை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு தொடர்பான ஓவியங்கள் வரையப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் ஓவியங்கள் வரைந்திடும்படி அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை கலெக்டர் மோகன், லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story