விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் மையம் கூடுதலாக தேவை பயணிகள் எதிர்பார்ப்பு


விழுப்புரம் ரெயில் நிலையத்தில்  பயணச்சீட்டு வழங்கும் மையம் கூடுதலாக தேவை  பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் மையம் கூடுதலாக அமைக்கவேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

விழுப்புரம்


தமிழகத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக இருப்பது விழுப்புரம் ரெயில் நிலையம் ஆகும். இங்கிருந்து மும்பை, புதுடெல்லி, திருப்பதி, கேரளா, புவனேஸ்வர், ஒடிசா, காரக்பூர், பெங்களூரு, சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருவதால் இந்த ரெயில் நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

பயணச்சீட்டு எடுக்கும் மையம்

இதனால் எந்நேரமும் விழுப்புரம் ரெயில் நிலையம் பரபரப்பாகவும், பயணிகள் கூட்டம் மிகுந்தும் காணப்படும். அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்படும். இவ்வாறு 24 மணி நேரமும் ரெயில் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த ரெயில் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்று பயணிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இங்குள்ள ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்கும் இடத்தில் முன்பதிவு செய்யும் பயணச்சீட்டு வழங்க 4 மையங்களும், முன்பதிவு அல்லாத பயணச்சீட்டு வழங்க 3 மையங்களும் உள்ளன. இவற்றில் முன்பதிவு செய்யும் பயணச்சீட்டு பெறுவதற்கான 4 மையங்களில ஒரேயொரு மையமும், முன்பதிவு அல்லாத பயணச்சீட்டு எடுக்கும் 3 மையங்களில் 2 மையங்களும் மட்டுமே இயங்குகிறது. மற்ற மையங்கள் இயங்குவதில்லை.

பயணிகள் காத்திருக்கும் நிலை

முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் மையம் தினமும் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை செயல்படுகிறது. அதன் பிறகு அதனை மூடிவிட்டு சென்றுவிடுகின்றனர். முன்பதிவு அல்லாத பயணச்சீட்டு வழங்கும் மையம் மட்டுமே 24 மணி நேரமும் செயல்படுகிறது.

இதனால் அங்கு பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 3 மையங்கள் இருந்தும் 2 மையத்தில் மட்டுமே பயணச்சீட்டு கொடுப்பதால் ஏராளமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. சில சமயங்களில் குறித்த நேரத்திற்குள் பயணச்சீட்டு எடுக்க முடியாமல் ரெயிலை தவற விட்டுவிடுகின்றனர். இதனால் வேறு வழியின்றி பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி பஸ் நிலையம் செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

எனவே விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் மையத்தை கூடுதலாக திறக்க வேண்டும் என்று பயணிகள் பலரும் நீண்ட நாட்களாக ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருச்சி கோட்ட மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு ஆய்வுப்பணிக்கு வரும்போதெல்லாம் ரெயில் நிலைய பயணிகள் சங்கத்தினர் இதை வலியுறுத்தி வருகின்றனர். பலமுறை மனுவாகவும் எழுதிக்கொடுத்துள்ளனர். இருந்தபோதிலும் இதுநாள் வரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கூடுதல் மையம் திறக்கப்படுமா?

ஆகவே பயணிகளின் சிரமத்தை போக்கிடும் வகையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் மையத்தை கூடுதலாக திறக்க காலதாமதம் செய்யாமல் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Next Story