அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ்ரூ.23½ கோடியில் விழுப்புரம் ரெயில் நிலையம் நவீனமயமாக்கும் பணிகாணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்


அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ்ரூ.23½ கோடியில் விழுப்புரம் ரெயில் நிலையம் நவீனமயமாக்கும் பணிகாணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.23½ கோடியில் விழுப்புரம் ரெயில்நிலையம் நவீனமயமாக்கும் பணியை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்


நாட்டில் உள்ள ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள ஆயிரத்து 309 ரெயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படுகின்றன.

இதில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், விருத்தாசலம் உள்பட 15 ரெயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் விழுப்புரம் ரெயில் நிலையம் ரூ.23½ கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ரெயில் நிலையங்களில் தொடங்கிய பணியை டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும், அவர் விழுப்புரம் ரெயில் நிலைய மறு சீரமைப்பு பணியையும் காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்தார்.

இதையொட்டி விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் ரவிக்குமார் எம்.பி. கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்டத்தில் முதற்கட்டமாக விழுப்புரம் ரெயில் நிலையம் உள்ளது. 2-ம் கட்ட பணிகளில் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளேன்.

திண்டிவனம்-புதுச்சேரி ரெயில்பாதை

சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் வரை ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்கிற நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்ய ரூ.50 லட்சத்தை ரெயில்வே துறை ஒதுக்கீடு செய்துள்ளது.

அதேபோல், திண்டிவனம்- புதுச்சேரி இடையே ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, ரெயில்வே பாதை அமைக்க சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ரெயில் போக்குவரத்தில் மேம்பாடு பெற்றால் கல்வியிலும், தொழிலிலும் வளர்ச்சி ஏற்படும். அந்த வகையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் மீண்டும் புத்துணர்வு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.38½ கோடி வருவாய்

இதை தொடர்ந்து, தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்ட கூடுதல் மேலாளர் எஸ்.டி.ராமலிங்கம் பேசுகையில், ரெயில் நிலையங்களைப் படிப்படியாக மாற்றி நவீனமயமாக்குவதே அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் நோக்கமாகும். விழுப்புரம் ரெயில் நிலையம் 2022-23ம் ஆண்டில் 54 லட்சத்து 71 ஆயிரம் பயணிகளுக்கு தனது சேவையை வழங்கி, ரூ.38 கோடியே 29 லட்சம் வருவாயை ஈட்டியுள்ளது என்றார்.

விழாவில் விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, பா.ஜ.க. மாவட்டத் தலைவர்கள் (தெற்கு) வி.ஏ.டி.கலிவரதன், (வடக்கு) ராஜேந்திரன், தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ெரயில்வே அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story