சந்திரயான்-3 திட்ட இயக்குனராக பணியாற்றிய விழுப்புரம் விஞ்ஞானி வீரமுத்துவேல்


சந்திரயான்-3 திட்ட இயக்குனராக பணியாற்றிய விழுப்புரம் விஞ்ஞானி வீரமுத்துவேல்
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சந்திரயான்-3 திட்ட இயக்குனராக விழுப்புரம் விஞ்ஞானி வீரமுத்துவேல் பணியாற்றியுள்ளார். அதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் விழுப்புரத்தில் ரெயில்வே பள்ளி முன்னாள் மாணவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்வதற்கு சந்திரயான்-3 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான்-3 ராக்கெட் நேற்று மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. அந்த ராக்கெட் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது.

இந்த சந்திரயான்-3 ராக்கெட் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 23-ந் தேதி ரோவர் நிலவில் தரை இறங்கும் என தெரிகிறது. இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவுவதற்கான இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவில் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வக இயக்குனர் அமித்குமார் பத்ரா, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், இணை திட்ட இயக்குனர் கல்பனா உள்பட பலர் இடம்பெற்றனர்.

விழுப்புரம் விஞ்ஞானி

இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கிய திட்ட இயக்குனரான இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் விழுப்புரத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருடைய தந்தை பழனிவேல் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் ஆவார். அவர் தற்போது தென்னக ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) தொழிற்சங்க மத்திய செயல் தலைவராக உள்ளார். தாய் ரமணி குடும்பத்தலைவி. இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் வசித்து வருகின்றனர்.

இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், விழுப்புரம் ரெயில்வே பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்தார். அதன் பிறகு சென்னை சாய்ராம் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தார். தொடர்ந்து, திருச்சியில் உள்ள ஆர்.இ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் எம்.இ. மெக்கானிக்கல் பயின்றார். அதன் பிறகு 2014-ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான 'இஸ்ரோ'வில் பணிக்கு சேர்ந்தார். இதனிடையே அவர், சென்னை ஐ.ஐ.டி.யிலும் பயிற்சி பெற்றார். அவர் தன்னுடைய தனித்திறமையால் உயர்ந்து தற்போது சந்திரயான்-3 திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். இதன் மூலம் அவர் விழுப்புரம் மண்ணுக்கு மட்டுமின்றி இந்திய திருநாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளதாக அவரது தந்தை பழனிவேல் பெருமிதத்துடன் கூறினார்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சந்திரயான் விண்கலம் வானில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த நிலையில் அதனை அனுப்பும் பணியில் வழிநடத்திய தமிழக விஞ்ஞானியான விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் பெரும் பங்காற்றினார். அவரை வாழ்த்தும் விதமாகவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவும் அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவர் படித்த விழுப்புரம் ரெயில்வே பள்ளியின் முன்னாள் மாணவர்கள் புருஷோத்தமன், ஸ்ரீதர், ஸ்ரீவினோத், கமலக்கண்ணன், நாசர், வெங்கடேசன், ஆசாத், காதர் உள்ளிட்ட பலரும் நேற்று மாலை அப்பள்ளியின் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

சந்திரயான்-3 ராக்கெட் வானில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்துள்ள நிலையில் அதனை அனுப்பும் பணியில் வழிநடத்திய இஸ்ரோ விஞ்ஞானியான விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல், விழுப்புரம் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே இருபாலர் ஆங்கிலவழி உயர்நிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்தார். இவரை உருவாக்கிய ரெயில்வே பள்ளியானது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடுவிழா கண்டிருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது. இதுகுறித்து அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கூறியதாவது:-

இப்பள்ளி கடந்த 4.2.1924-ல் தொடங்கப்பட்டது. எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை ஆரம்ப பள்ளியாக தொடங்கிய இந்த பள்ளி 1998-ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டத்துடன் ஆங்கில வழியில் மிகவும் சிறப்பாக இயங்கி வந்த இந்த பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்டோர் படித்து வந்தனர். நாளடைவில் தனியார் பள்ளி மோகம் அதிகரிக்க தொடங்கியதன் விளைவாக இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு படிப்படியாக குறைந்தது. இதன் விளைவாக கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் இப்பள்ளி மூடப்பட்டது. இப்பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்றனர்.


Next Story