விழுப்புரம் நகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

விழுப்புரம் நகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
விழுப்புரம்,
நகரமன்ற கூட்டம்
விழுப்புரம் நகரமன்ற கூட்டம் இன்று மாலை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கடந்த ஓராண்டில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை படைத்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து நகரமன்ற கவுன்சிலர்கள் பேசியதாவது:-
அடுக்குமாடி குடியிருப்பு
மணவாளன் (தி.மு.க.) :- மருதூர் ஏரி, கல்லூரி சாலை, மகாராஜபுரம், பவர்ஹவுஸ்ரோடு வாய்க்கால் புறம்போக்கு பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்பு வீடுகள் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட உள்ளதால் அங்கு குடியிருப்பவர்களுக்கு அரசு பெண்கள் கல்லூரி அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும். நகராட்சி அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு பழைய நகராட்சி அலுவலகத்தை டவுன்ஹாலாக மாற்றினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், எனது வார்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
கோல்டுசேகர் (அ.தி.மு.க.) :- 1-வது வார்டில் 48 தெருக்கள் உள்ள நிலையில் குப்பைகளை சரிவர அள்ளுவதில்லை. 2 பேர் மட்டுமே குப்பை அள்ள பணியில் அமர்த்தியுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்த வேண்டும். பழைய நகராட்சி அலுவலக இடத்தில் வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும்.
பாதாள சாக்கடை திட்டப்பணி
ராதிகா செந்தில் (அ.தி.மு.க.) :- பழைய பஸ் நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட கடைகளை விரைவில் ஒப்படைக்க வேண்டும். பழைய நகராட்சி அலுவலகத்தை மருத்துவமனையாகவோ, பள்ளியாகவோ மாற்றினால் பயனுள்ளதாக இருக்கும். பழைய பஸ் நிலைய பூங்காவை பராமரிக்க வேண்டும்.
இளந்திரையன் (பா.ம.க.) :- 37-வது வார்டுக்குட்பட்ட ராஜாநகர், சுப்பிரமணிய நகர் பகுதிகளில் தெருமின் விளக்கு வசதி செய்து தர வேண்டும். பாதாள சாக்கடை திட்டப்பணி மந்தகதியில் நடந்து வருவதால் அப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
அலுவலர்கள் மீது குற்றச்சாட்டு
சுரேஷ்ராம் (காங்கிரஸ்):- நகராட்சிக்கு சொந்தமான சில இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அந்த ஆக்கிரமிப்பை அகற்றி நகராட்சியின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். எனது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சரிவர குடிநீர் வருவதில்லை, அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் பிரச்சினையை சரிசெய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனனி தங்கம் (தி.மு.க.) :- சாலாமேடு பகுதியில் ஏற்கனவே உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு டெபாசிட் என்ற பெயரில் ரூ.12 ஆயிரம் விதித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இதுபோன்று வசூல் செய்யாத நிலையில் இப்போது ஏன் வசூல் செய்கிறீர்கள் என மக்கள் கேட்கிறார்கள். இதுகுறித்து விசாரித்து உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். இதை கேட்டறிந்த நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்ச்செல்வி, கவுன் சிலர்களின் கோரிக்கைள் குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என்றார். இக்கூட்டத்தில் நகரமன்ற கவுன்சிலர்கள் புருஷோத்தமன், புல்லட் மணி, பத்மநாபன், சங்கர், அன்சார்அலி, சாந்தராஜ், கலை, ஜெயப்பிரியா சக்திவேல், நவநீதம் மணிகண்டன், சசிரேகா பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.