திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை-விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை-விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்

இளம்பெண்ணுடன் பழக்கம்

வானூர் அருகே பொம்மையார்பாளையத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது 40). இவர் மரக்காணம் அருகே முருக்கேறி பகுதியில் கட்டுமான பொருட்கள் வாடகைக்கு விடும் கடை வைத்து நடத்தி வந்தார். திருமணமான இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு இவரது கடையில் வேலை செய்து வந்த 25 வயதுடைய இளம்பெண்ணிடம், எனக்கு ஆண் வாரிசு இல்லை. எனவே உன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி உள்ளார்.

திருமணத்திற்கு மறுப்பு

இந்த நிலையில், அந்த இளம்பெண் தயாளனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததோடு, அந்த இளம்பெண்ணை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் இதுகுறித்து திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தயாளனை கைது செய்தனர்.

10 ஆண்டு சிறை

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கின் சாட்சிகள் விசாரணை முழுவதும் முடிவடைந்த நிலையில் நீதிபதி ஹெர்மிஸ் நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில் குற்றம் சாட்டப்பட்ட தயாளனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அதை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.


Next Story