விளம்பர பதாகைகள் அகற்றம்


விளம்பர பதாகைகள் அகற்றம்
x
திருப்பூர்


உடுமலை நகரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டது.

விழிப்புணர்வு

திருவிழாக்காலங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒரே இடத்தில் கூடுவது வழக்கமாகும். இதனைப் பயன்படுத்தி விளம்பரம் தேடும் முயற்சியாக ஆங்காங்கே விளம்பரப் பதாகைகள் அமைக்கப்படுவதும் வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் முறையான அனுமதியின்றி பிரம்மாண்டமான விளம்பரப் பதாகைகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்படும்போது விபத்துக்களுக்கு காரணமாகி விடுகிறது.

உடுமலை பகுதியில் தேர்த்திருவிழாவையொட்டி குட்டை திடல், தளி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட்டது. அதிக எண்ணிக்கையில் நெருக்கமாக அமைக்கப்பட்ட இந்த விளம்பரப் பதாகைகளால் விபத்துகள் ஏற்படும் நிலை இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் ஏற்கனவே உள்ள நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி அனைத்து விளம்பரப் பதாகைகளையும் உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

அகற்றம்

இதனையடுத்து விளம்பரப் பதாகைகளை தாங்களாகவே முன் வந்து அகற்றினர்.இதுகுறித்து விளம்பரப் பதாகை அமைப்பாளர்கள் கூறியதாவது:-

திருவிழா போன்ற முக்கிய நாட்களில் தான் ஓரளவு வருவாய் ஈட்ட முடியும்.முழுமையாக அனைத்து பதாகைகளையும் அகற்றக் கூறியதால் பல நிறுவனங்களிடம் பணம் பெற முடியாத நிலை ஏற்படும். இதனால் கடும் இழப்பை சந்தித்துள்ளோம். எனவே குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவுகளில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாதுகாப்பான முறையில் விளம்பரப் பதாகைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். முக்கிய வீதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story