விநாயகர், திரவுபதி அம்மன் கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


விநாயகர், திரவுபதி அம்மன் கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:45 PM GMT)

பரங்கிப்பேட்டையில் அடுத்தடுத்து விநாயகர், திரவுபதி அம்மன் கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடலூர்

பரங்கிப்பேட்டை

கோவில் கதவு உடைப்பு

பரங்கிப்பேட்டை பெரியமதகு இறக்கத்தில் திரவுபதி அம்மன் கோவில் கட்டி முடித்து சுமார் ஓராண்டுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு பின்னர் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மீண்டும் நேற்று காலை 6 மணியளவில் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் கோவிலுக்கு சென்ற போது கோவில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உண்டியல் பணம் திருட்டு

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்து கோவில் தர்மகர்த்தா நடராஜன் மற்றும் பக்தர்கள் திரண்டு வந்து உள்ளே சென்று பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் கோவிலில் இருந்த பெரிய உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

அதேபோல் எதிரே உள்ள விநாயகர் கோவில் முன்புறம் உள்ள உண்டியலும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் மர்ம நபர்கள் 2 கோவில்களிலும் உண்டியலை உடைத்து சுமார் ரூ.2 லட்சத்தை திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

பின்னர் இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து உடைக்கப்பட்ட உண்டியல்களை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் இது குறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பரபரப்பு

அடுத்தடுத்து 2 கோவில்களில் மர்மநபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற சம்பவத்தால் பரங்கிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story