கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகா் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தில் 900 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கற்பக விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. மேலும் கற்பக விநாயகர் சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து பூஜை செய்வது போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதேபோல் காந்தி சாலையில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் உள்ள கற்பக விநாயகர், சிவகாம சுந்தரி சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

சங்கராபுரம்

சங்கராபுரம் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாவையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலிக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடைபெற்று பிரமாண்ட விநாயகர் மண் சிலை வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

தெருவில் வைத்து வழிபாடு

இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தங்களின் தெருக்களில் வித, விதமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடினர். இந்துக்களின் வீடுகளில் மாவிலை தோரணங்கள் கட்டி, கோலம் போட்டு அலங்காரம் செய்து பூஜை அறையில் களி மண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வைத்து, அணிகலன்கள் மற்றும் எருக்கம்பூ மாலை, அருகம்புல் மாலை அணிவித்து அவல், பொரிகடலை, கொழுக்கட்டை, நாவற்பழம், விளாம்பழம் உள்ளிட்ட பழ வகைகள் மற்றும் சுண்டல், பாயாசம் போன்றவற்றை படையல் வைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 900 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story