விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும் - கலெக்டர் தகவல்


விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும் - கலெக்டர் தகவல்
x

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிக பெரிய கடமை இருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய அரசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் கலவையற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மங்காத ரசாயன சாயம் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ண பூச்சுகளை பயன்படுத்த கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களாக திருவள்ளூர் புட்லூர் ஏரி, எம்.ஜி.ஆர். நகர் ஏரி, மப்பேடு கூவம் ஈசா ஏரி, திருமழிசை, வெள்ளவேடு, ஊத்துக்கோட்டை குளம், ஊத்துக்கோட்டை சித்தேரி, ஊத்துக்கோட்டை கொசஸ்தலையாறு, திருத்தணி காந்தி ரோடு குளம், ஆர்.கே. பேட்டை வண்ணான் குளம், பள்ளிப்பட்டு கரிம்பேடு குளம், பொதட்டூர்பேட்டை பாண்டரமேடு ஏரி, திருத்தணி பராசக்தி நகர் குளம், கனகம்மாசத்திரம் குளம், திருப்பாலைவனம் புலிகாட் ஏரி, கும்மிடிப்பூண்டி ஏழுகண் பாலம், பக்கிங்காம் கால்வாய், திருவள்ளூர் காக்களூர் ஏரி, சீமாவரம் கொசஸ்தலையாறு போன்ற 17 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விதிமுறைகள்படி கரைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story