விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைப்பு
உடுமலை,மடத்துக்குளத்தில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள் ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது.அதை முன்னிட்டு உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து சாம்ராஜ்ய மக்கள் இயக்கம், ஹரியானி ஜனநாயக முன்னணி, இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா) மற்றும் பொதுமக்கள் சார்பில் 318 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக விநாயகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகளை செய்தும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் வந்தனர்.
இதையடுத்து விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இறுதி நாளான நேற்று இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக நேதாஜி விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து சிலைகளை அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று கரைக்கும் நிகழ்வு தொடங்கியது.
மடத்துக்குளம் 2-வது நாளாக
ஆற்றங்கரையில் பிரகாசமான விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அமராவதி ஆற்றில் சிலைகளைக் கரைக்கும் போது பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் மிதவைகள் அமைத்து தீயணைப்புத்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.
முதல் கட்டமாக நேற்று முன் தினம் குடிமங்கலம் வட்டாரத்தில் உள்ள சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நேற்று 2-வது நாளாக உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட நூற்றுக்கணக்கான சிலைகள் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.