போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் ஓட்டுனர் உரிமம் ரத்து


போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் ஓட்டுனர் உரிமம் ரத்து
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:46 PM GMT)

பொள்ளாச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஆவல் சின்னாம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

போக்குவரத்து அதிகாரிகள் வால்பாறை ரோட்டில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தினர். அவர்களுக்கு ஹெல்மெட் அணியாமல் செல்வதால் விபத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த குறும்படத்தை போட்டு காண்பித்தனர். மேலும் அதிகாரிகள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்கள்.

ஓட்டுனர் உரிமம்

இதற்கிடையில் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. ஆம்புலன்ஸ் டிரைவரிடம் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அந்த டிரைவர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்சை ஓட்டி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தின் பதிவு எண், டிரைவர் பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் ஆம்புலன்சில் நோயாளி இருந்ததால் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், செல்வி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறும்போது, 18 வயது பூர்த்தி அடையாத குழந்தைகளை பெற்றோர்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது. இருசக்கர வாகன விபத்துகளில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவதில்லை. அதிவேகமாக, செல்போன் பேசிக் கொண்டு கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுவதாலும் விபத்துகள் நடக்கிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

விபத்துகள்

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து எல்லையில் மாதந்தோறும் 50 விபத்துகள் நடக்கிறது. இதில் 25 சதவீத விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் 80 சதவீத விபத்துகள் இருசக்கர வாகனங்களால் தான் ஏற்படுகிறது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால் இழப்பீடு கிடைக்காது மேலும் வழக்கமாக ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். என்றார்.


Next Story