பட்டாசு தயாரிப்பில் விதிமீறல்கள் தொடரும் நிலை


பட்டாசு தயாரிப்பில் விதிமீறல்கள் தொடரும் நிலை
x

சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிப்பில் விதிமீறல்கள் தொடருவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிப்பில் விதிமீறல்கள் தொடருவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பட்டாசு தொழில்

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கு பல லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் உரிய அனுமதி பெறாத சிலர் பொது இடங்கள், வனப்பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் பட்டாசுகளை தயாரித்து வருகிறார்கள்.

இதேபோன்று தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு வெளி மாநிலங்களில் நல்ல விலை கிடைப்பதால் சிவகாசி பகுதியில் தற்போது அதிகளவில் உரிய அனுமதியின்றி பேன்சிரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படும் போது விபத்துக்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

2 பேர் கைது

உரிய அனுமதி பெற்று ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் போதே பல இடங்களில் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ள நிலையிலும் தற்போதுவரை ஆலைகளிலும் விதிமீறல்கள் தொடர்கிறது.

சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் சிவகாசி-கன்னிசேரி ரோட்டில் ஆய்வு பணியில் ஈடுபட்ட போது கீழபெத்துலுப்பட்டி கிராமத்தில் ஒரு பட்டாசு ஆலைக்கு அருகில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கைப்பற்றிய போலீசார் விஸ்வநத்தம் காமராஜர்நகரை சேர்ந்த ஜெகதீசன் மகன் கார்த்திக் (வயது 41), செல்லையநாயக்கன் பட்டியை சேர்ந்த சிவலிங்கம் மகன் மணிகண்டன் (43) ஆகியோரை கைது செய்தனர்.

அதிகாரிகள் நடவடிக்கை

இவர்களிடம் இருந்து ஏராளமான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பட்டாசுகள் எங்கு தயாரிக்கப்பட்டது? எதற்காக இங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகாசி பகுதியில் பட்டாசு உற்பத்தியில் தொடர்ந்து விதிமீறல்கள் இருப்பது அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆதலால் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story