சோலார் மின்விளக்குகளால் ஜொலிக்கும் விராலிமலை முருகன் கோவில்

சோலார் மின்விளக்குகளால் விராலிமலை முருகன் கோவில் ஜொலிக்கிறது.
விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன், வள்ளி-தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பல்வேறு புராதன பெருமைகள் அடங்கிய இக்கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலை துறை மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பக்தர்களின் பாதுகாப்பு, பயணம் உறுதி செய்யப்படும் வகையில் தார் சாலையின் ஓரங்களில் சுமார் ரூ.4 லட்சம் செலவில் எஸ்.எஸ். பைப் மூலம் கைப்பிடி அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் 14 சோலார் பவர் மின்கம்பங்கள் தார் சாலை ஓரங்களில் கடந்த வாரம் அமைக்கப்பட்டன. இந்த சோலார் மின் கம்பங்களால் தார் சாலை இரவு நேரங்களில் மின்னொளியில் ஜொலித்து வருகிறது. மேலும், இரவு நேரங்களில் மலை மீது செல்லும் பக்தர்களின் பயணம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல் மாற்றுத்திறனாளிகளும், வயது முதிர்ந்தவர்களும் எளிதில் தரிசனம் செய்வதற்காக மலைமேல் வாகனம் நிறுத்தும் இடத்தில் கட்டப்பட்டு வரும் லிப்ட் சேவையை விரைவில் கோவில் நிர்வாகம் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.






