ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கினால் போராட்டம்-விஷ்வ இந்து பரிஷத் எச்சரிக்கை


ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கினால் போராட்டம்-விஷ்வ இந்து பரிஷத் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Jun 2023 1:11 AM IST (Updated: 15 Jun 2023 5:46 PM IST)
t-max-icont-min-icon

ஒரே பாலின திருமணத்துக்குஅங்கீகாரம் வழங்கினால் போராட்டம் நடத்தப்படும் என்று விஷ்வ இந்து பரிஷத் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருச்சி

நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொண்ட துறவியர்களை கவுரவிக்கும் விழா விஷ்வ இந்து பரிஷத் சார்பில் நேற்று திருவானைக்காவலில் நடந்தது. விழாவிற்கு வாகீசர் மடாலயம் அவிநாசி ஆதீனம் ஸ்ரீகாமாட்சிதாசசுவாமிகள் தலைமை தாங்கினார். இந்த விழா கோபூஜை, திருமுறை விண்ணப்பம், திவ்யப்பரபந்த பாராயணம், மற்றும் வேத கோஷங்களுடன் தொடங்கியது. மார்க்க தர்ஷல் மண்டல் அமைப்பாளர் சுதாகர் வரவேற்றார். அகில பாரத இணைச்செயலாளர் பி.எம்.நாகராஜன், தென்பாரத அமைப்பாளர் கேசவராஜூ ஆகியோர் அறிமுக உரையாற்றினர். சீரவை ஆதீனம் ராமாநந்த குமரகுருபர சுவாமிகள், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், நியமானந்தா சுவாமிகள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில், மதம் மாறிய பிறகும் சாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டின் கீழ் தவறாக அரசு பதவிகளில் இருப்பவர்களை கண்டறிந்து அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும். மக்கள் வேற்றுமைகள், பாகுபாடில்லாமல் ஒற்றுமையாக வாழ, இந்து மக்களிடையே சாதி மோதல்களை அகற்றி நல்லிணக்கம் ஏற்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள், நகரங்களுக்கு சென்று மக்களுக்கு நல்வழி காட்டுவது. ஒரே பாலின திருமணம் மற்றும் உறவு என்பது பாரத நாட்டின் கலாசாரத்திற்கும், பண்பாட்டிற்கும். வாழ்வியல் முறைக்கும் எதிரானது. இதற்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது. அங்கீகாரம் வழங்கினால் இதற்கு எதிராக பிரசாரம் மற்றும் போராட்டம் நடத்தப்படும்.

கோவில்களை அரசின் பிடியிலிருந்து விடுவித்து ஓய்வு பெற்ற அரசுஅதிகாரிகள் மற்றும் ஆன்மிக பிரமுகர்களை கொண்ட தனித்தியங்கும் வாரியம் அமைக்க வேண்டும். சாதிமோதல்களை காரணம் காட்டி கோவில்களை பூட்டி பூஜைகளை தடைசெய்யக்கூடாது. உரிய அரசாணைகள் மூலம் பிரச்சினைக்குரிய கோவில்களில் தொடர்ந்து பூஜை நடைபெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அகில பாரத இணை பொதுச்செயலாளர்கோ. ஸ்தானுமாலையன் நிறைவுரையாற்றினார். நிகழ்ச்சியை வேதாந்தாநந்த சுவாமிகள் தொகுத்து வழங்கினார். இதில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆதீனங்கள், ஜீயர்கள், துறவியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் செய்திருந்தனர்.


Next Story