முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: பொள்ளாச்சியில் பிளக்ஸ் பேனர், கட்சி கொடிகள் இல்லை-பொதுமக்கள் பாராட்டு

முதல்-அமைச்சர் வருகையையொட்டி பொள்ளாச்சியில் பிளக்ஸ் பேனர், கட்சி கொடிகள் இல்லாததால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
பொள்ளாச்சி
முதல்-அமைச்சர் வருகையையொட்டி பொள்ளாச்சியில் பிளக்ஸ் பேனர், கட்சி கொடிகள் இல்லாததால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
பொதுமக்கள் பாராட்டு
மாநாடு, பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசியல் கட்சியினரின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தற்போது பிளக்ஸ் பேனர், கட்சி கொடிகள் இல்லாமல் இருக்காது. கட்சியின் தலைவர் வருகிறார் என்றால் சாலை தடுப்புகள், சாலையோரங்களில் எங்கு பார்த்தாலும் பிளக்ஸ் பேனர்களும், கட்சி கொடிகளும் வரிசையாக வைக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்படும்.
இதற்கிடையில் சாலையோரத்தில் வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள், கட்சி கொடிகளால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி எங்கும் பிளக்ஸ் பேனர்கள், கட்சி கொடிகள் வைக்கப்படவில்லை. இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் உத்தரவு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பிளக்ஸ் பேனர்கள், கொடிகள் கட்டி வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பிளக்ஸ் பேனர்கள், கட்சி கொடிகளால் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பிளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார். இதை ஆலோசனை கூட்டங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜி கட்சி நிர்வாகிகளிடம் கூறினார். இதன் காரணமாக பொள்ளாச்சியில் நிகழ்ச்சி நடைபெறும் மாநாடு இடம் மற்றும் வரவேற்பு அளிக்கப்படும் 19 இடங்களில் மட்டும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு உள்ளன. வேறு எங்கும் கட்சி கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






