வடநெம்மேலி முதலை பண்ணையில் இரவு 9 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி
இந்திய அளவில் 1000-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ள வடநெம்மேலி முதலை பண்ணையில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கண்டுகளிக்கும் வகையில் இரவு நேர பார்வையாளர் அனுமதி தொடங்கப்பட்டுள்ளது.
முதலை பண்ணை
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கும் சென்னைக்கும் இடையே உள்ள வடநெம்மேலியில் அமைந்துள்ளது முதலை பண்ணை. ஆசிய அளவிலும், இந்திய அளவில் அதிக முதலைகள் உடைய பெரிய முதலைபண்ணை இதுவாகும்.
இந்தியாவிலுள்ள முதலை வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் நன்னீர் முதலைகள், அமெரிக்காவில் உள்ள அலிகேட்டர் முதலைகள், உப்பு நீர் முதலைகள், சதுப்பு நில முதலைகள், நீள வாயுடைய கரியல் ரக முதலைகள் என பல்வேறு வகை முதலைகள் இந்த பண்ணையில் உள்ள நீர் குளங்களில் பராமரிக்கப்படுகின்றன. அதேபோல் ஆப்பிக்கா காடுகளில் உள்ள நீர் நிலைகளில் வாழும் மனிதர்களை விழுங்கும் ராட்சத முதலைகளும் இங்கு உள்ளன.
இவை 10 முதல் 15 கிலோ மாட்டிறைச்சி, கோழி இறைச்சி உண்ணும் தன்மை உடையதாகும். முதலைகளுக்கு ஜீரண தன்மை குறைவு என்பதால் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே இவற்றுக்கு உணவாக மாமிசம் அளிக்கப்படுகிறது. ஒரு முறை உணவு உண்டால் 3 நாட்களுக்கு பசியின்றி வாழும் தன்மை முதலைகளுக்கு உண்டு. முதலை பண்ணை தொடங்கப்பட்ட போது, 6 ஆயிரம் முதலைகள் இங்கே இருந்தன. தற்போது 1,000 முதலைகள் மட்டுமே இங்கே உள்ளது. ஆண்டுக்கு 300 முட்டைகள் போட்டு 300 முதலை் குஞ்சுகள் உற்பத்தியாகின்றன.
கட்டணம் வசூலிப்பு
பார்வையாளர்கள் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.100-ம், சிறுவர்களுக்கு ரூ.50 -ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்ததால், இங்கே பராமரிக்கப்படும் முதலைகளுக்கு கடந்த 46 ஆண்டுகளாக மாட்டிறைச்சி, கோழி இறச்சி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
முதலைகள் மட்டும் இல்லாமல் இங்கு தென் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட அனகோண்டா பாம்பு உள்ளது. இந்த வகை பாம்பு 25 அடி முதல் 50 அடி வரை வளரக்கூடியதாகும். அதேபோல் கொமோட்டா டிராகன், அலிகேட்டர் வகை ஆமைகள், ராட்சத பல்லி போன்றவைகளும் இங்கு பராமரிக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு காட்சி படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பகல் நேரத்தில் மட்டுமே சுற்றுலா பயணிகளும், பார்வையாளர்களும் இங்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இங்கு நேற்றுமுன்தினம் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு நேர பார்வையாளர்கள் அனுமதியும் தொடங்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் இந்த முதலை பண்ணைக்கு வரும் பயணிகள் ஆன்லைனில் நபர் ஒருவருக்கு ரூ.900 கட்டணம் செலுத்தி பதிவு செய்துவிட்டு இங்கு வரவேண்டும். இரவு நேரத்தில் வருபவர்களுக்கு முதலைகளின் செயல்பாடு, அதன் கண்களில் ஆரஞ்சு நிறத்தில் ஔி வீசும் காட்சியை பார்ப்பதற்கு டார்ச் லைட்டு்கள் வழங்கப்படுகின்றன.
இரவு நேரத்தில் தண்ணீரை விட கரையில் இருக்கும் அவற்றின் வீரியம் அதிகம் இருக்கும் என்றும் அவற்றின் செயல்பாடுகள், பற்றியும் முதலை பண்ணை பணியாளர்கள் விளக்குகின்றனர்.
விழிப்புணர்வு
அதேபோல் வீட்டுக்கு பாம்புகள் வந்ததால் நம்மை கடிக்காமல், அவற்றை லாவகமாக பிடிக்க எந்தவகையில் பாம்பு பிடிப்பவர்களை வரவழைத்து பிடிப்பது என்பது குறித்து 2 வயதுடைய அனகோண்டா பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அதேபோல் கொமோடா டிராகன், அலிகேட்டர் ஆமைகள் குறித்தும் காட்சி படுத்தப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் பற்றி முதலை பண்ணை பெண் பணியாளர் ஒருவர் விளக்கி கூறுகிறார்.
மேலும் திரையில் ஔிப்பட காட்சி மூலம் காட்டில் நீரிலும், நிலப்பரப்பிலும் உள்ள முதலைகள் எப்படி விலங்குகளையும், கால்நடைகளையும் வேட்டையாடி மாமிசமாக உண்ணுகின்றன என்பது பற்றியும், பாம்புகளை பிடித்து நம்மை தீண்டாமல் எப்படி பத்திரமாக காட்டில் விடுவது போன்றவை குறித்து சுற்றுலா பயணிகளின் சந்தேகங்களுக்கு ஏற்ப விளக்கி கூறுகின்றனர்.