பார்வை குறைபாட்டை போக்க 1¾ லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து


பார்வை குறைபாட்டை போக்க 1¾ லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து
x

பார்வை குறைபாட்டை போக்க 1¾ லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

திருச்சி

வைட்டமின் குறைபாடு

உலகம் முழுக்க 5 வயதுக்கு உட்பட்ட 25 கோடி குழந்தைகளுக்கு, வைட்டமின் குறைபாடு உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது. சில குழந்தைகளுக்கு, பிறக்கும் போதே வைட்டமின்-ஏ குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளாவிட்டால், குழந்தைகளுக்கு இந்த குறைபாடு ஏற்படும். வைட்டமின் குறைபாடு இருக்கிறதா? இல்லையா? என்பதை குழந்தை பிறந்து 6 மாதத்துக்கு பின்னரே கண்டுபிடிக்க முடியும்.

அதேபோல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு, தேவையான முக்கிய நுண்ணூட்டச் சத்தாக வைட்டமின்-ஏ விளங்குகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த குறைபாட்டை ஈடு செய்வதற்காக போலியோ சொட்டு மருந்து, தடுப்பூசி வரிசையில் தற்போது வைட்டமின்-ஏ திரவம், 6 மாதங்களுக்கு ஒருமுறை குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

வைட்டமின் ஏ சொட்டு மருந்து

இதற்காக தமிழகம் முழுவதும் 6 மாதத்தில் இருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. 6 மாதம் முதல் 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 1 மில்லி அளவும், 1 வயது முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 மில்லி அளவும் இந்த திரவம் வழங்கப்பட்டது.

திருச்சி மாநகரில் 18 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 82 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நேற்று வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 6 மாத குழந்தை முதல் 5 வயது குழந்தை வரை மொத்தம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 255 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு வருகிற 25-ந்தேதிக்குள் வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மாலைக்கண் குறைபாடு, பார்வை இழப்பு, வயிற்று போக்கு மற்றும் நுரையீரல் தொற்று நோய்கள் தடுக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதன்காரணமாக குழந்தைகள் இறப்பு விகிதம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story