கோத்தகிரியில் கைப்பந்து போட்டி தொடக்கம்
ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான கோத்தகிரியில் கைப்பந்து போட்டி தொடங்கி உள்ளது.
கோத்தகிரி
கோத்தகிரி காந்தி மைதானத்தில் ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான முதல்கட்ட கைப்பந்து போட்டிகள் நேற்று தொடங்கியது. கிராமங்கள், நகரங்களில் உள்ள ஆண்களுக்கான கைப்பந்து அணி வீரர்கள் மற்றும் எரிபந்து அணி வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், தென்னிந்திய அளவில் கிராமிய விளையாட்டு போட்டிகள் ஈஷா புத்துணர்வு கோப்பைக்காக நடத்தப்படுகிறது. இதில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. ஒரு போட்டியில் கெங்கரை, சிவானந்தபுரம் கிராம அணிகள் மோதியது. இதில் கெங்கரை அணி 2-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. 2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் கட்ட போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.9 ஆயிரம், 2-ம் இடம் ரூ.6 ஆயிரம், 3 மற்றும் 4-ம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.