சேலத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர்
சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர்
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து கார் மூலம் சேலம் வந்தார். அப்போது சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் இருந்து திருவாக்கவுண்டனூர் புறவழிச்சாலை வரை அவருக்கு வழி நெடுகிலும் மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர்கள் பலர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நேற்று முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முல்லைவேந்தன் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
தொண்டர்கள் குவிந்தனர்
தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்க திரண்டனர். அவர்கள் மேள, தாளத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
சிலர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் அருகே ஒருவரையொருவர் முண்டியத்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கூடியதால் எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன்பு பரபரப்பாக காணப்பட்டது.