வி.பி.சிங் மறையலாம், அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் மறையாது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


வி.பி.சிங் மறையலாம், அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் மறையாது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை,

முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதனை தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் புதிதாக வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், இந்த விழாவில், வி.பி.சிங்கின் மனைவி சீத்தாகுமாரி, மகன்கள் அஜய்சிங், அபய்சிங், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதிக் கதவை திறந்து வைத்தவர் வி.பி.சிங். வி.பி.சிங்கிற்கு சிலை அமைத்தது எங்களது கடமை. சமூக நீதி காவலரின் சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி. வி.பி.சிங்கிற்கு தாய் வீடு உத்தரபிரதேசம் என்றால் தந்தை வீடு தமிழ்நாடு. நாங்களும் வி.பி.சிங் குடும்பத்தினர்தான்.

11 மாதங்களே பிரதமராக இருந்தாலும் வி.பி.சிங் செய்த சாதனைகள் மகத்தானவை. ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தியவர் அவர். தந்தை பெரியாருக்கு தனிப்பட்ட நன்றியை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தவர். பெரியாரின் பெயரை உச்சரிக்காமல் அவரது பேச்சு இருக்காது. வி.பி.சிங் பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வி.பி.சிங் மறையலாம், அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் மறையாது.

மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக, முறையாக வழங்கப்பட வேண்டும். பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டை முறையாக கண்காணிக்க அனைத்துக் கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிகள் வேறுபடலாம்; ஆனால் பிரச்சனைகள் ஒன்றுதான். புறக்கணிப்பு, ஒதுக்குதல், அடிமைத்தனம், தீண்டாமையை முறிக்கும் மருந்துதான் சமூகநீதி.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story