லெப்பைக்குடிகாடு பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்


வேப்பூர் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கண்டித்து லெப்பைக்குடிகாடு பேரூராட்சி அலுவலகம் முன்பு நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழக்குடிகாடு வெள்ளாற்று தடுப்பணையில் இருந்து 73 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதற்காக தமிழக அரசு வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி 70 சதவீத பணிகளை முடித்துள்ளனர்.

ஏற்கனவே லெப்பைக்குடிகாடு, பென்னகோணம், கீழக்குடிகாடு ஆகிய கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாலும், வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தை நீர் ஆதாரம் உள்ள வேறு பகுதியில் தமிழக அரசு தொடங்க நடவடிக்கை எடுக்கக்கோரி லெப்பைக்குடிகாடு நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் ஏற்கனவே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததால், அந்த திட்டத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காத்திருப்பு போராட்டம்

இந்த நிலையில் வேப்பூர் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்தும், ஏற்கனவே வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தை வேறு பகுதியில் தொடங்கக்கோரி பேரூராட்சி கிராம சபை கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தற்போது பணிகள் நடைபெற்று வரும் பணிகளை தடுத்து நிறுத்த கோரியும், வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தை வேறு பகுதியில் தொடங்கக்கோரி லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் லெப்பைக்குடிகாடு நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் லெப்பைக்குடிகாடு பேரூராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 6 மணியளவில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இன்று (வியாழக்கிழமை) காலை மீண்டும் காத்திருப்பு போராட்டம் தொடர போவதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Next Story