மருதூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்


மருதூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
x

விஸ்வநாதபுரத்தில் சாலை அமைக்க வலியுறுத்தி மருதூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

கரூர்

சாலை அமைக்க கோரிக்கை

மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரம் என்று அழைக்கப்படும் சுப்பன் ஆசாரிக்களம் பகுதியில் சாலை வசதி அமைத்து கொடுக்க வலியுறுத்தி இப்பகுதிமக்கள் சார்பில் மருதூர் பேரூராட்சி, குளித்தலை வருவாய்த்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதிக்கு வந்த மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் இப்பகுதியை ஆய்வு மேற்கொண்டு சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

காத்திருப்பு போராட்டம்

இந்தநிலையில், இப்பகுதியில் சாலை அமைத்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மருதூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு கடந்த 14-ந் தேதி ஒப்பாரி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போராட்டம் தொடர்பாக குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் விஸ்வநாதபுரம் பகுதியில் மண் கொட்டி சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் அதிகாரிகள் உறுதி அளித்தபடி இப்பகுதியில் சாலை அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், பள்ளி மாணவ-மாணவிகள் ஆகியோர் நேற்று மருதூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் சமரசம் அடையாததால் 5 மணி நேரம் வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் சாலை அமைக்கவுள்ள நாள் குறித்து எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என தங்கள் கருத்தை முன்வைத்து பேசினர். இதையடுத்து விஸ்வநாதபுரம் பகுதியில் வரும் 30-ந் தேதி சாலை அமைக்க மண் கொட்டி சமப்படுத்தபட உள்ளதாகவும், இதற்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் விஜயன் குளித்தலை போலீசாருக்கு கடிதம் அளித்தார்.

விஸ்வநாதபுரம் பகுதியில் அதிகாரிகள் தெரிவித்தபடி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story