சென்னை தலைமை செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் - அரசு பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு...!


சென்னை தலைமை செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் -  அரசு பணியாளர்கள்  சங்கம் அறிவிப்பு...!
x

சென்னை தலைமை செயலகத்தில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 10 ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அரசு பணியாளர் சங்கங்கள் அறிவித்து உள்ளது.

நாகப்பட்டினம்

நாகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக் குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தின் முடிவில் அவர் நிருபர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

போராட்டக் குழு கூட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். கடந்த 2003- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதிக்கு முன்னர் பணியில் சேர்ந்து பதவி உயர்வு, நிரந்தர காலமுறை ஊதியம் பெற்றவர்களுக்கும் பழைய ஓய்வு ஊதியம் வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் நியாய விலைக்கடை பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் பேசினர்.

வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி பெற்று வரும் துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், டாஸ்மாக் பணியாளர்கள், பட்டு வளர்ச்சித் துறை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நிரந்தர ஊதிய விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்திற்கான தனித் துறை பணியாளர்களுக்கு நிறுத்தப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்குவதோடு, வரவு செலவு கணக்குகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனவும் கூறினர்.

தலைமைச் செயலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம்

மேலும், ஜூன் மாதம் 30-ந் தேதியன்று அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான ஒப்பந்த காலம் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் எல்லா செலவினங்களையும் பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அகவிலைப்படி, நிலுவை, சரண்டர் விடுப்பு, சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அரசு அழைத்து பேசி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் மாதம் 10-ந்தேதி சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து அரசு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என கூறினார்.

வேலை நிறுத்தம்

மேலும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் நியாய விலை கடை பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நிரந்தர ஊதிய விகிதம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் ஜூன் 7, 8, 9 ஆகிய 3 தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்றும் அவர் கூறினார்.


Next Story