தர்மபுரி நகராட்சி கூட்டம்:அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்புவார்டுகளில் பணிகள் நடைபெறவில்லை என புகார்


தர்மபுரி நகராட்சி கூட்டம்:அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்புவார்டுகளில் பணிகள் நடைபெறவில்லை என புகார்
x
தினத்தந்தி 25 July 2023 7:30 PM GMT (Updated: 25 July 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

வார்டுகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என்று புகார் தெரிவித்து தர்மபுரி நகராட்சிகூட்டத்தில் இருந்துஅ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நகராட்சி கூட்டம்

தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். துணை தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் அண்ணாமலை வரவேற்று பேசினார். கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்களை நகராட்சி வருவாய் ஆய்வாளர் மாதையன் வாசித்தார். கவுன்சிலர்களின் கேள்விகள் மற்றும் புகார்களுக்கு நகரமைப்பு அலுவலர் ரவீந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் ஜெயவர்மன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், கோவிந்தராஜன், ரமண சரண் சீனிவாசன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் 42 பொருட்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு விவாதம் நடந்தது. தொடர்ந்து தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வெளிநடப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கூட்டத்தில் எடுத்து கொள்ளப்படும் பல்வேறு தீர்மானங்கள் ஏற்கனவே பணிகளை முடித்துவிட்டு எங்களிடம் ஒப்புதல் மட்டுமே பெறுகிறார்கள். பணிகள் தொடர்பாக முன்கூட்டியே எந்த தகவலும் தெரிவிப்பதில்லை. பல்வேறு பணிகளுக்கு கூடுதல் செலவு செய்து பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. எங்களது வார்டுகளில் எந்த பணியும் நடைபெறுவதில்லை. தர்மபுரி நகரில் அனுமதி பெறாமல் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்படுகிறது. கட்டிட அனுமதிக்கு லட்சக்கணக்கில் பணம் கேட்கிறார்கள். இது தொடர்பாக நகராட்சி உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டால் பதில் அளிப்பதில்லை. கவுன்சிலர்களை மதிப்பதில்லை. தர்மபுரி நகரில் பல்வேறு சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டது. ஒருவர் சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டுவது குறித்து புகார் தெரிவித்தால் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டிட அனுமதி

இந்த புகார் தொடர்பாக நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது கூறுகையில், தர்மபுரி நகரில் 1,200 சதுர அடிக்கு மேல் கட்டிட அனுமதி பெற டிடிசிபி-க்கு தான் செல்ல வேண்டும். அதற்கு கீழ் உள்ள கட்டிட அனுமதிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டிட உரிமையாளர்கள் விண்ணப்பிக்கிறார்கள். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறுவதை போல் நகர மன்றமோ, நகராட்சி தலைவரோ எந்த கட்டிட அனுமதியும் வழங்குவதில்லை. இது பற்றி தெரியாமல் பேசுகிறார்கள். நகரில் அனைத்து வார்டுகளுக்கும் எந்தவித பாகுபாடும் இன்றி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று கூறினார்.


Next Story