ஆலந்தூர்- ஆதம்பாக்கம் இடையே ரூ.2¾ கோடியில் நடை மேம்பாலம்


ஆலந்தூர்- ஆதம்பாக்கம் இடையே ரூ.2¾ கோடியில் நடை மேம்பாலம்
x

ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே ரூ.2 கோடியே 71 லட்சத்தில் நடைமேம்பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

சென்னை

சிறப்பு மருத்துவ முகாம்

சென்னையை அடுத்த ஆலந்தூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை தாங்கினார். மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன், சுகாதார அலுவலர் டாக்டர் சுதா, முன்னாள் கவுன்சிலர் பி.குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமை தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். முகாமில் சிறுநீர் பரிசோதனை, எக்கோ, இ.சி.ஜி., முழு ரத்த பரிசோதனை, காசநோய், தொழுநோய் கண்டறிதல், மார்பக புற்றுநோய். கருப்பை புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மற்றும் பொது மருத்துவம் பார்க்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் இதில் பயன் அடைந்தனர்.

ரூ.2¾ கோடியில் நடை மேம்பாலம்

சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு மருந்து, மாத்திரை மற்றும் கண் சிகிச்சை பெற்றவர்களுக்கு மூக்கு கண்ணாடியும், முதல்-அமைச்சரின் காப்பீடு திட்ட அட்டைகளும் வழங்கப்பட்டன. இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ரேணுகா, பூங்கொடி, சாலமோன், துர்காதேவி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது:-

ஆலந்தூர்- ஆதம்பாக்கம் இடையே ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல நடை மேம்பாலம் அமைக்க ரூ.2 கோடியே 71 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியை ஒதுக்க உள்ளேன். மீதமுள்ள தொகை மாநகராட்சி மூலம் செலவிடப்பட்டு விரைவில் பணி தொடங்கப்படும்.

தமிழ்நாட்டில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின் கட்டண உயர்வால் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது உயர் மின் பயன்பாட்டு நேரத்தில்('பீக் அவர்ஸ்') தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட 25 சதவீதம் மின் கட்டணத்தில் 10 சதவீதம் குறைக்கப்பட்டு, தற்போது 15 சதவீத மின் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அனகாபுத்தூர்

இதேபோல் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் ஜி.காமராஜ், கமிஷனர் அழகுமீனா, பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, மண்டல தலைவர் வே.கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story