ரூ.700 லஞ்சம் வாங்கிய கிடங்கு மேலாளர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே வீடு கட்டும் திட்டத்தில் கம்பிகள் வழங்குவதற்காக ரூ.700 லஞ்சம் வாங்கிய கிடங்கு மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்
உளுந்தூர்பேட்டை
வீடு கட்டும் திட்டம்
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் விஜயகுமார். இவர் அதே ஊரில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி வருகிறார்.
இந்த நிலையில் வீடு கட்டுவதற்கு தேவையான சிமெண்டு, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை பெறுவதற்காக விஜயகுமார் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு கிடங்கு மேலாளராக பணிபுரிந்து வரும் சந்திரா(வயது 54) என்பவர் கட்டுமான பணிக்கு தேவையான கம்பிகளை வழங்குவதற்கு ரூ,700 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
கிடங்கு மேலாளர் கைது
பின்னர் பணத்தை எடுத்து வருவதாக கூறிவிட்டு வந்த விஜயகுமார், இது குறித்து கள்ளக்குறிச்சியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் பொடி கலந்த ரூபாய் நோட்டுகளுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்ற விஜயகுமார் அங்கிருந்த கிடங்கு மேலாளர் சந்திராவிடம் பணத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையிலான போலீசார் சந்திராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.