தர்மபுரி மாவட்டத்தில் விதிகளை மீறும் விதை விற்பனையாளர்களின் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை


தர்மபுரி மாவட்டத்தில் விதிகளை மீறும் விதை விற்பனையாளர்களின் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Oct 2023 7:00 PM GMT (Updated: 21 Oct 2023 7:00 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் விதிகளை மீறும் விதை விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் விதிகளை மீறும் விதை விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரத்து செய்யப்படும்

விதை விற்பனையாளர்கள் விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்து விவசாயிகளுக்கு உரிய முளைப்பு திறன் கொண்ட தரமான விதைகளை வழங்க வேண்டும். விதை இருப்பு பதிவேட்டில் விற்பனை செய்த விதைகளை தினமும் கழித்து இருப்பினை சரிபார்த்து முறையாக பராமரிக்க வேண்டும். விதை உரிமம் கடைக்கு வரும் விவசாயிகளின் பார்வையில்படும்படி வைக்க வேண்டும்.

விதை விற்பனையின்போது பயிர் ரகத்தின் பெயர், குவியல் எண், காலாவதி தேதி, விலை, விவசாயி பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கடைக்காரரின் கையொப்பத்துடன் கூடிய ரசீது விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விதைகளை உர மூட்டைகள், பூச்சி மருந்துகளின் அருகே வைக்கக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்களின் உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும்.

உரிமம் ரத்து

விதை வினியோகஸ்தர்கள் அனைத்து குவியல்களுக்கும் விதை மாதிரி எடுத்து பகுப்பாய்வு அறிக்கையை பெற்று தரத்தை உறுதி செய்த பிறகு விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டும். விதைகளை அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்க வேண்டும். காலாவதியான விதைகளை கடையில் வைத்திருந்தாலும் அல்லது விற்பனை செய்தால் அது சட்டப்படி குற்றம். எனவே விதைகள் சட்ட விதிகளின்படி விதை விற்பனையாளர்கள் கவனத்துடனும், விவசாயிகளின் நலன் சார்ந்தும் விற்பனை செய்ய வேண்டும்.

விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதைகள் பருவத்துக்கு ஏற்றவையா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் தங்கள் பகுதி வேளாண்மை அல்லது தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரூர் வட்டாரத்தில் விதிகளை மீறி விதைகளை விற்பனை செய்த விதை விற்பனை நிலைய உரிமம் தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story