டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்றால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் சாந்தி எச்சரிக்கை


டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்றால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் சாந்தி எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2023 7:00 PM GMT (Updated: 14 Jun 2023 6:33 AM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்றால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தி எச்சரித்துள்ளார்.

விலை பட்டியல்

தர்மபுரி மாவட்டத்தில் சாராயத்தை கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், சட்டவிரோத மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவை தொடர்பான அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக வாரந்தோறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மதுக்கடைகளிலும் விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு நன்றாகத் தெரியும் வகையில் கண்டிப்பாக வைக்கப்பட வேண்டும்.

அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது.

13 பேருக்கு அபராதம்

கடந்த வாரத்தில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த மதுக்கடை ஊழியர்கள் 13 பேருக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுக்கடையில் வெளிநபர்களை வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த ஒரு விற்பனையாளர் பணியிடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார். இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் மதுக்கடை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் தெரிவிக்கலாம்

மதுக்கடைகளுக்கு அருகே உள்ள பெட்டிக்கடைகளில் தண்ணீர் பாட்டில், டம்ளர் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்து மது அருந்த அனுமதித்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் தாபா ஓட்டல்கள், சந்துக்கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றை கண்டறிவதற்காக டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு, தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அடங்கிய கண்காணிப்பு குழு மூலம் கூட்டு தணிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடும் மதுக்கடை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story