மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் சாந்தி எச்சரிக்கை


மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் சாந்தி எச்சரிக்கை
x

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி 

தினத்தந்தி 21 Jun 2023 1:00 AM IST (Updated: 21 Jun 2023 7:36 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆய்வு கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்த்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகளில் காவல்த்துறை, வருவாய்த்துறை, மதுவிலக்கு அமல்பிரிவு, தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் மற்றும் வனத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழிப்புணர்வு

தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், பதுக்கி வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கள்ளச்சாராயம் தொடர்பான புகாரை 63690-28922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்த தொழிலில் இருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கள்ளச்சாராயத்தை ஒழிக்க அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கள்ளச்சாரயத்தை முற்றிலும் ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்

கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் கீதாராணி (தர்மபுரி), ராஜசேகர் (அரூர்), டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகேஸ்வரி, கலால் உதவி ஆணையர் சாந்தி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தாசில்தார்கள், மருத்துவத்துறை, வனத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story