பொதுமக்கள் கடக்கும் இடங்களில் எச்சரிக்கை விளக்குகள்
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையை பொதுமக்கள் கடக்கும் இடங்களில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதிகரிக்கும் விபத்துகள்
கோவை-பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையை ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு கடந்து செல்ல, 2½ கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு இடைவெளி விடப்பட்டு உள்ளது.பெரும்பாலும், இந்த இடத்தில்தான் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இங்கு சிறிய சோலார் சிக்னல்கள் மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் விபத்துகள் தொடர்கிறது.
எச்சரிக்கை விளக்குகள்
இதை தடுக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முதற்கட்டமாக கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு, எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவு உள்ளிட்ட 2 இடங்களில் சோலார் எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் வேகத்தை குறிப்பிட்ட பகுதிகளில் குறைக்க முடியும் என்றும், இதன் காரணமாக விபத்துகளும் குறையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.