காது வலிக்கு அறுவை சிகிச்சை செய்த மாணவி மரணம் அடைந்த வழக்கு வண்ணாரப்பேட்டை போலீஸ் விசாரணைக்கு மாற்றம்
காது வலிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவியின் மரணம் தொடர்பான வழக்கை வண்ணாரப்பேட்டை போலீஸ் விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
காது வலி
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த நந்தினி என்பவருடைய மகள் அபிநயா (வயது 16). பிளஸ்-1 படித்து வந்த மாணவி அபிநயாவுக்கு அடிக்கடி காது வலி ஏற்பட்டது. இதற்காக திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 14-ந் தேதி அவரது காதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சை முடிந்து அரை மணி நேரம் கழித்து அபிநயாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி அபிநயா, கடந்த 17-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாய் வழக்கு
இந்தநிலையில் தனக்கு தெரிவிக்காமல் மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்ததால், மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடக்கோரி மாணவியின் தாய் நந்தினி, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள், திருவொற்றியூர் போலீசார் கூட்டு சேர்ந்து, என் மகளின் உடலை பெற்றுச் செல்லும்படி நிர்பந்திக்கின்றனர். போலீசார் என்னை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளனர். என்னால் சுதந்திரமாக நடமாடக்கூட முடியவில்லை.
டாக்டர்கள் மீது நடவடிக்கை
எனது மகள் மரணம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை வேறு சுதந்திரமான புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்ற வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி, தனியார் மற்றும் அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த மனு, அவசர வழக்காக நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை மாற்றம்
அப்போது, மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முறையாக நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாணவி மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை திருவொற்றியூர் போலீசிடம் இருந்து, வண்ணாரப்பேட்டை போலீசுக்கு மாற்றியதுடன், 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.