தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் அகற்றும் பணி தொடங்கியது..!


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் அகற்றும் பணி தொடங்கியது..!
x

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் அகற்றும் பணி தொடங்கியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் நடந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்ற அனுமதி அளித்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் கழிவுகளை அரசே அகற்ற முடிவு செய்தது. மேலும் இந்த ஆலை கழிவுகளை அகற்றுவதற்கான முழுச்செலவையும் ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உள்ள ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவது, ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது ஆகிய பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் மேற்பார்வையில் உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் ஹேமந்த், புறநகர் டி.எஸ்.பி. சுரேஷ், மாநகராட்சி செயற்பொறியாளர் ரங்கநாதன், தொழிற்சாலைகளின் இணை இயக்குனர் சரவணன், தீயணைப்புத்துறை மாவட்ட துணை அலுவலர் ராஜூ மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த 2 அதிகாரிகள் உள்பட 9 பேர் கொண்ட மேலாண்மை குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றும் பணி இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அகற்றப்படும் கழிவுகள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாசல் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் அந்த வாசலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதன்மூலம் கழிவுகள் அகற்றும் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் நிறுவன வாசலில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கழிவுகள் அகற்றும் பணி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story