மோகூர் ஏரியில் இருந்து வீணாக வழிந்தோடும் தண்ணீர்


மோகூர் ஏரியில் இருந்து வீணாக வழிந்தோடும் தண்ணீர்
x
தினத்தந்தி 19 Oct 2023 12:15 AM IST (Updated: 19 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேதம் அடைந்த மதகை சரிசெய்யாததால் மோகூர் ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வழிந்தோடுவதால் விவசாய நிலத்தில் நெல் நாற்றுகள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

பொதுப்பணித்துறை ஏரி

கள்ளக்குறிச்சி அருகே மோகூரில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் மோகூர், சோமநாதர்குடி, அலம்பலம், வண்ணந்தூர், சடையம்பட்டு ஆகிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசனவசதி பெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஏரியில் மீன் குத்தகைக்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது குத்தகைதாரர்கள் மீன்பிடிப்பதற்காக ஏரியிலிருந்து தண்ணீரை திறந்து விடும்போது மதகின் ஷட்டர் உடைந்து சேதம் அடைந்ததால் ஏரியில் இருந்த தண்ணீர் அனைத்தும் வீணாக வெளியேறியது. இதையடுத்து மதகை சரி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கடந்த ஒரு வருடமாக விவசாயிகள் முறையிட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

வீணாக வழிந்தோடும் தண்ணீர்

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கல்வராயன்மலையில் பெய்த பலத்த மழையின் காரணமாக நிரம்பிய கோமுகிஅணையை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பாசனத்துக்காக தண்ணீரை திறந்து விட்டார். இந்த தண்ணீர் தோப்பூர் அருகே உள்ள கோமுகி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து வாய்க்கால் மூலம் மோகூர் ஏரிக்கு கடந்த 3 நாட்களாக வந்து கொண்டு இருக்கிறது.

ஆனால் ஏரியின் மதகில் உள்ள ஷட்டர் சேதம் அடைந்த இருப்பதால் ஏரிக்கு வரும் தண்ணீர் அனைத்தும் கடந்த 3 நாட்களாக சேதமடைந்த மதகின் வழியாக வீணாக வழிதோடுகிறது. இவ்வாறு வழிந்தோடும் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்துள்ளதால் பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதையும் காண முடிகிறது.

விவசாயிகள் கவலை

மேலும் ஏரியில் போதிய தண்ணீர் இல்லாததால் அந்த பகுதியில் உள்ள கரும்பு வயல் மற்றும் பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி சேதம் அடையும் சூழ்நிலை உள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மோகூர், சோமண்டார்குடி, க.அம்பலம், வன்ன்சூர், சடையம்பட்டு ஆகிய 5 கிராமங்களில் விவசாயம் கேள்விக்குறியாக உள்ளதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். எனவே மோகூர் ஏரியின் சேதம் அடைந்த மதகை சரிசெய்ய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

போர்க்கால அடிப்படையில்

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ஏரியின் மதகு சேதமடைந்ததால் ஏரியில் இருந்து வீணாக வழிந்தோடும் தண்ணீர் அருகில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக புகுந்து செல்கிறது. இதனால் நெல் நாற்றுகள் நீரில் மூழ்கி சேதம் அடையும் நிலை உருவாகி உள்ளது. கடன்வாங்கி சாகுபடி செய்த நெற்பயிர் கண்எதிரே சேதம் அடைவதை காணும்போது மன வேதனையாக உள்ளது. எனவே சேதமடைந்த மதகை உடனடியாக சரிசெய்ய வேண்டும். அப்போதுதான் வருகிற பருவமழைக்காலத்திலும் ஏரியில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இ்ல்லை என்றால் அடுத்த ஆண்டு பயிர் சாகுபடி கேள்விக்குறியாகி எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வருகிற 22-ந் தேதி முதல் 25-ந்தேதிக்குள் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்து உள்ளதால் ஏரியில் சேதம் அடைந்த மதகை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story