குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
திருமூர்த்திமலை மலைவாழ் குடியிருப்பில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
திருமூர்த்திமலை மலைவாழ் குடியிருப்பில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
உடுமலையை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திருமூர்த்திமலை மலைவாழ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 110 குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகிறார்கள். அடிப்படை தேவையான குடிநீர் வினியோகத்திற்கு ஏதுவாக 3 தொட்டிகள் அமைக்கப்பட்டது. அதில் ஒரு தொட்டிக்கு மட்டும் ஆழ்குழாய் கிணற்றுத் தண்ணீர் வருவதாக தெரிகிறது. மற்ற 2 தொட்டிகளும் காட்சி பொருளாக மாறி உள்ளது. இதனால் திருமூர்த்தி அணைப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்தும் சூழலுக்கு மலைவாழ் மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
மேலும் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை பருகுவதால் தொற்று நோய்களுக்கு மலைவாழ்மக்கள் ஆளாகின்றனர். குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மலைவாழ் குடியிருப்பில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதுடன் ஆஸ்பத்திரிக்கு நடையாய் நடக்க வேண்டி உள்ளது. புதுப்புது விதமான தொற்று நோய்கள் பரவி வருகின்ற தற்போதைய சூழலில் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வழங்குவதற்கு அதிகாரிகள் முன்வராதது வேதனை அளிக்கிறது. எனவே திருமூர்த்திமலை மலைவாழ் குடியிருப்புக்கு சுகாதாரமான தண்ணீர் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பது மலைவாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.