வாளவாடி அருகே வீணாகி வரும் பி.ஏ.பி.தண்ணீ்ரால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகிறார்கள்.
வீணாகி வரும் பி.ஏ.பி. தண்ணீர்
வாளவாடி அருகே வீணாகி வரும் பி.ஏ.பி.தண்ணீ்ரால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகிறார்கள்.வாளவாடி அருகே வீணாகி வரும் பி.ஏ.பி.தண்ணீ்ரால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகிறார்கள்.
சுழற்சி முறையில் பாசன வசதி
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர்வரத்து மற்றும் நீர் இருப்பினை பொறுத்து திறக்கப்படுகின்ற தண்ணீர் வினியோகத்திற்கு ஏதுவாக பாசன நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் பாசன வசதி பெற்று வருகின்றன.
அந்த வகையில் தற்போது 2-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. விவசாயிகளின் தண்ணீர் வசதிக்கு ஏற்றவாறு மக்காச்சோளம், தானியவகைகள், காய்கறிகளை சாகுபடி செய்து உள்ளன.
பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
இந்த நிலையில் தீபாலபட்டி அருகே பி.ஏ.பி.பிரதான கால்வாயில் இருந்து பிரிந்து வருகின்ற கிளை வாய்க்காலில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாளவாடி அருகே கடைமடை பகுதியில் வாய்க்காலில் தண்ணீர் வழிந்து விளை நிலங்களையும் அதில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திருமூர்த்தி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை. ஆனாலும் பி.ஏ.பி. தொகுப்பு அணையின் நீராதாரங்களில் மழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டதை தொடர்ந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் 2 ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம். தற்போது 2-ம் சுற்று தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.
வீணாகும் தண்ணீர்
இந்த சூழலில் வாய்க்காலில் ஒரு சில விவசாயிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள்அதிகப்படியான தண்ணீரை திறந்து விடுகின்றனர். இதனால் தண்ணீர் வாழவாடி அருகே கடைமடை பகுதியில் தேங்கி வீணாகி வருகிறது.அப்போது அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து அதில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. பி.ஏ.பி. திட்டத்தின் உயிர்நாடியான பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்து ஏராளமான தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று கொண்டுள்ள தற்போதைய சூழலில் தண்ணீரை சேமித்து பயன்படுத்த வேண்டியது கடமையும் அவசியமும் ஆகும்.
ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஏராளமான தண்ணீர் வீணாகி யாருக்கும் பயனில்லாமல் சென்று கொண்டு உள்ளது வேதனை அளிக்கிறது.
இது குறித்து தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்வரவில்லை. எனவே 500 கிளை வாய்க்காலில் அதிகப்படியான தண்ணீரைத் திறந்து விட்டு நீர் இழப்பை ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறைரீதியான மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அது மட்டுமின்றி சீரான முறையில்தண்ணீரை திறந்து விட்டு விளைநிலங்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.