ஓலப்பாளையம் ஊராட்சி காமாட்சி நகரில்தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்கிராம மக்கள், கலெக்டரிடம் மனு
மோகனூர் தாலுகா ஓலப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காமாட்சி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் ஓலப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இடும்பன்குளம் கிராமம் காமாட்சி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ரூ.30 ஆயிரம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்வதில்லை. ஊராட்சி நிர்வாகத்தினர் வீட்டுக்கு ரூ.2 ஆயிரம் வசூல் செய்தும் 3 குடம் தண்ணீர் கூட கிடைப்பதில்லை.
2 மாதமாக முறையாக குடிநீர் வராததால் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இதுகுறித்து பல முறை புகார் செய்தும், நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் எங்கள் பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. குறிப்பாக 1, 2-வது வார்டுகள் புறக்கணிக்கப்படுகிறது. எங்கள் பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.