2 மாத ஊதிய பாக்கியை வழங்க கோரி குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
2 மாத ஊதிய பாக்கியை வழங்க கோரி குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம்
கூட்டு குடிநீர் திட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.437 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதமாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதனால் ஊதிய பாக்கியை வழங்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சி.ஐ.டி.யு. குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க ஒப்பந்த தொழிலாளர்கள் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு டேங்க்மேடு பகுதியில் உள்ள திருப்பூர் மாநகராட்சி நீரூற்று நிலையம் முன்பு திடீர் கஞ்சி தொட்டி திறப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத் தலைவர் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பாலகுமார், பொது செயலாளர் ஆர்.சரவணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் போராட்டத்தில் சங்க ஒப்பந்த தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஒப்பந்ததாரர் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மாலை 6 மணிக்கு போராட்டம் முடிவடைந்தது.