அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைகிறது


அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைகிறது
x
தினத்தந்தி 25 Jun 2023 6:45 PM GMT (Updated: 25 Jun 2023 6:45 PM GMT)

பருவமழை தாமதமாகுவதால் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்,

பருவமழை தாமதமாகுவதால் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தாமதமாகும் பருவ மழை

குமரி மாவட்டம் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரு பருவமழை பெறும் மாவட்டமாகும். தென்மேற்கு பருவ மழை வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பெய்யத் தொடங்கும். இந்த மாதத்தில் சராசரியாக 149.9 மி.மீ. வரை மழை பெய்யும்.

ஆனால் நடப்பாண்டில் இதுவரை தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கவில்லை. அதே வேளையில் வெப்பச்சலனத்தால் இதுவரை 22.6 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. அந்த வகையில் மாவட்டத்திற்கு இந்த மாதம் 15 சதவீதம் மழை மட்டுமே கிடைத்துள்ளது.

அணைகள் திறப்பு

இந்த நிலையில் மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக கடந்த 1-ந் தேதி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் திறக்கப்பட்டன. அப்போது பேச்சிப்பாறை உள்பட பிரதான 4 அணைகளில் மொத்தம் 4,326 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. இது இந்த அணைகளின் மொத்த கொள்ளளவான 8,233 மில்லியன் கன அடியில் 52.54 சதவீதம் ஆகும்.

பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் விடப்பட்டு வரும் நிலையில் தற்போது அணைகளின் நீர் இருப்பு வேகமாக சரிந்து வருகிறது. மேலும் கோதையாறு பாசனத் திட்டத்தில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வறண்ட நிலையில் பெருஞ்சாணி அணை

நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணையில் நீர் இருப்பு 2,833 மில்லியன் கன அடியாகவும் (மொத்த கொள்ளளவு 4,350 மில்லியன் கன அடி), பெருஞ்சாணி அணையின் நீர் இருப்பு 170 கன அடியாகவும் (மொத்த கொள்ளளவு 2,890 மில்லியன் கன அடி), சிற்றாறு 1 அணையின் நீர் இருப்பு 197 மில்லியன் கன அடியாகவும் (மொத்த கொள்ளளவு 393 மில்லியன் கன அடி), சிற்றாறு 2 அணையின் நீர் இருப்பு 315 மில்லியன் கன அடியாகவும் (மொத்த கொள்ளளவு 600 மில்லியன் கன அடி) உள்ளது. குறிப்பாக பெருஞ்சாணி அணையின் நீர் இருப்பு 170 மில்லியன் கன அடியாக சரிந்து வறண்ட நிலையில் காணப்படுகிறது.

மாவட்டத்தில் வரும் நாட்களில் அணைப் பகுதிகள் மற்றும் பாசனப்பகுதிகளில் தொடர் கன மழை பெய்யாவிட்டால் பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறையினர் கன மழையை எதிர்பார்த்த நிலையில் உள்ளனர்.

மீன்கள் செத்து மிதக்கும் அபாயம்

இதுகுறித்து முன்னோடி விவசாயி பி.ஹென்றி கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்காமல் ஏமாற்றி வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. குறிப்பாக நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் வகையில் பெருஞ்சாணி அணையில் இருந்து கடந்த மாதம் முழுவதும் தண்ணீர் எடுக்கப்பட்ட நிலையில் அந்த அணை தற்போது வறண்டு காணப்படுகிறது. ெபருஞ்சாணி அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால் வெயிலின் தாக்கம் காரணமாக அணையில் உள்ள மீன்கள் செத்து மிதக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து பானத்திற்கு 850 கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் எடுக்கலாம் என்ற நிலை இருப்பினும், கால்வாய் தூர் வாரப்படாததால் 725 கன அடிக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடமுடியாத நிலை உள்ளது. எனவே தொடர் கன மழை பெய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்

இவ்வாறு அவர் கூறினார்.

42.69 சதவீதம் தண்ணீர் உள்ளது

இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் தற்போது அனைத்து அணைகளிலுமாக 42.69 சதவிகித தண்ணீர் இருப்பு உள்ளது. அதே வேளையில் பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் வழங்கி வருகிறோம். ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழை இயல்பான அளவில் பெய்யவில்லை. அணைப் பகுதிகளில் தொடர் கன மழை பெய்தால் வரும் நாட்களில் பாசனத்திற்கு தட்டுபாடின்றி தண்ணீர் கொடுக்க முடியும்' என்றார்.

சாரல் மழை

இந்தநிலையில் மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் லேசான சாரல் மழை பெய்தது.


Next Story