திருப்பத்தூரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


திருப்பத்தூரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x

திருப்பத்தூரில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த பலத்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த பலத்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருப்பத்தூரில் நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. மாலையில் வெயிலுடன் லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் இரவு 7 மணி முதல் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் விட்டு விட்டு பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

இதனால் திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் சிரமம் அடைந்தனர். கிருஷ்ணகிரி மெயின் ரோடு அட்வகேட் ராமநாத நகர் பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கி உள்ளது. இதேபோன்று திருப்பத்தூர் டவுன் காமராஜர் நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அந்த தெருக்களில் உள்ள தார் சாலையை உடைத்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போராட்டம்

திருப்பத்தூர் -புதுப்பேட்டை ரோடு ெரயில்வே மேம்பாலம் அடியில் இடுப்பளவு மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து தேங்கியுள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகம் மற்றும் ஜோதிமங்கலம், கதிரிமங்கலம், ஜெயபுரம், புதுப்பேட்டை, நாட்டறம்பள்ளி செல்லும் பொதுமக்கள் இந்த வழியாக செல்ல முடியாமல் கிருஷ்ணகிரி மேம்பாலம் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளது. புதுப்பேட்டை ெரயில்வே மேம்பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தாததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி அலுவலர்கள் சென்று உடனடியாக சரி செய்வதாக உறுதி அளித்தனர். இதே போல கருப்பனூர் எம்.ஜி.ஆர். நகர், வி.கே. நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தெருக்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

தொடர் மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. திருப்பத்தூர் அருகே உள்ள ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஆம்பூர்-8, ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதி-10.40, ஆலங்காயம்-12.80, வாணியம்பாடி-36, நாட்டறம்பள்ளி- 67, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை பகுதி-28, திருப்பத்தூர்-68.


Next Story