ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் இயக்க 6-வது நாளாக தடை விதிப்பு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் இயக்க 6-வது நாளாக தடை விதிப்பு
x

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க இன்று 6-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

ஒகேனக்கல்,

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த இரு அணை களில் இருந்து தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை 15 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.

ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்று அருவிகளில் தண்ணீர் விழுவதை பார்த்து ரசித்தனர். இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க இன்று 6-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.


Next Story