கல்வராயன்மலை கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர்: அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்


கல்வராயன்மலை கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர்: அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
x

கல்வராயன்மலை அடிவாரம் கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கான தண்ணீரை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கோமுகி அணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 46 அடி ஆகும். கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யக்கூடிய மழை நீரானது கல்படை, பொட்டியம், மாயம்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக இந்த அணைக்கு வரும். இவ்வாறு வரும் தண்ணீரை அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தேக்கி வைத்து விட்டு அக்டோபர் முதல் வாரத்தில் பாசனத்துக்கு திறந்து விடுவது வழக்கம். அதன்படி கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 44 அடியை எட்டியது.

விவசாயிகள் கோரிக்கை

இதையடுத்து அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார். இதன்படி புதிய மற்றும் பழைய பாசன வாய்க்கால்கள் வழியாக வினாடிக்கு 120 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், ஒன்றியக்குழு தலைவர்கள் சத்தியமூர்த்தி, சந்திரன், அலமேலு, ஆறுமுகம், துணை தலைவர்கள் பாட்ஷா பி ஜாகிர் உசேன், அன்புமணி மாறன், பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், வடக்கனந்தல் நகர செயலாளர் ஜெயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story