மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 3,599 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, கடந்த 24-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்தில் குறுவை சாகுபடிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைய தொடங்கியது. அதே சமயம் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு வரும் நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.
இந்த நிலையில், மேட்டூர் அணையில் தற்போது மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மாலை வரை 2,249 கன அடியாக இருந்த நீரவரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 3,599 கன அடியாக அதிகரித்துள்ளது.
அதே சமயம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த 10 ஆயிரம் கனஅடி தண்ணீர், நேற்று காலை முதல் 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று அணையின் நீர்மட்டம் 115.56 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 115.38 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 86.29 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.