உயர் தொழில் நுட்ப சாகுபடியை பின்பற்றி குறைந்த அளவு நீரில் அதிக மகசூல் பெறும் பயிர்களை பயிரிட வேண்டும் விவசாயிகளுக்கு நீர்வள திட்ட இயக்குனர் அறிவுரை
உயர் தொழில் நுட்ப சாகுபடியை பின்பற்றி குறைந்த அளவு நீரில் அதிக மகசூல் பெறும் பயிர்களை பயிரிட வேண்டும் என விவசாயிகளுக்கு நீர்வள திட்ட இயக்குனர் அறிவுரை வழங்கி உள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தில் நீர்வள, நிலவள திட்டம் பகுதி 3-ன் கீழ் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, நீர்வளத்துறை, மீன்வளத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் திட்டங்களின்கீழ் பயன்பெறும் திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கூடுதல் தலைமை செயலாளரும், நீர் மற்றும் நிலவள திட்ட இயக்குநர் தென்காசி ஜவஹர் தலைமை தாங்கி பயனாளிகளின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார்.
கால்வாய்களை புனரமைக்க வேண்டும்
பின்னர் அவர் பேசுகையில், உயர் தொழில் நுட்ப சாகுபடியை பின்பற்றி குறைந்த அளவு நீரில் அதிக மகசூல் பெறும் பயிர்களை விவசாயிகள் பயிரிட வேண்டும், மழைநீரை அதிக அளவு சேமித்து பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள் ஏரிகள், அணைக்கட்டுகள், கால்வாய்களை புனரமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும், நீர்வளத்துறையின் மூலம் ஏரிகளை பலப்படுத்துதல், வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல், மதகு, கலிங்குகளை புனரமைத்து புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் நீர்வளத்துறை திட்ட செயற்பொறியாளர் முருகன், வேளாண்துறை நிபுணர் கனகா, மீன்வளத்துறை நிபுணர் பாலசிஸ், கால்நடைத்துறை பொறியாளர் மனோகரன், கண்காணிப்புப் பொறியாளர் நீர்வளத்துறை (வெள்ளாறு வடிநில வட்டம்) கடலூர் பாஸ்கரன், செயற்பொறியாளர் வெள்ளாறு வடி நிலக்கோட்டம் (கூடுதல் பொறுப்பு) விருத்தாசலம் காந்தரூபன் மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.