அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் தண்ணீர் தட்டுப்பாடு


அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் தண்ணீர் தட்டுப்பாடு
x

நாகை அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் அங்கு தங்கி உள்ள மாணவ-மாணவிகள் அவதி அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகை அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் அங்கு தங்கி உள்ள மாணவ-மாணவிகள் அவதி அடைந்துள்ளனர்.

அரசு மருத்துவக்கல்லூரி

நாகை அருகே ஒரத்தூரில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில், ரூ.366.85 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியுடன் கூடிய ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டது. இதில் ஆஸ்பத்திரி 7 தளங்கள் மற்றும் 700 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டது.மருத்துவ கல்லூரி வளாகமும், 7 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 6 தளங்களில் 600 படுக்கை வசதிகளுடன் கூடிய விடுதிகள் கட்டப்பட்டது.

நாகை அரசு மருத்துவக்கல்லூரியை கடந்த ஜனவரி மாதம் 12- ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். ஆஸ்பத்திரி கட்டிடம் உள் கட்டமைப்பு பணிகள் காரணமாக இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

மாணவர் விடுதி

மருத்துவக்கல்லூரியில் 150 மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அடிப்படைத் தேவையான தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் மாணவ- மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறியதாவது:-

நாகை மருத்துவக்கல்லூரி விடுதியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தங்கி படித்து வருகிறோம்.

தண்ணீர் தட்டுப்பாடு

விடுதியில் அத்தியாவசிய தேவையான தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. அவ்வப்போது லாரி மூலம் வரும் தண்ணீரை தான் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறோம்.

விடுதியில் சேர்ந்து ஒரு ஆண்டு் நிறைவடையும் நிலையில், தற்போது வரை இந்த தண்ணீர் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. பெரும்பாலான நாட்கள் குளிக்காமலேயே கல்லூரிக்கு செல்கிறோம். அழுக்கு துணியை அணிந்து கொண்டு வகுப்பறைக்கு செல்கிறோம். துணி துவைக்காமல் துர்நாற்றம் வீசுகிறது.

கடும் சிரமம்

மாணவர்களே இவ்வளவு சிரமப்பட்டு வரும் நிலையில், மாணவிகள் சொல்ல முடியாத வேதனையில் இருந்து வருகின்றனர். தினந்தோறும் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தால், அவர்களும் இன்று, நாளை சரி செய்யப்படும் என கூறி காலம் தாழ்த்தி கொண்டு செல்கின்றனர்.

மேலும் அதிகரிக்கும்

மருத்துவக்கல்லூரி விடுதியில் தண்ணீர் பிரச்சினை ஒரு ஆண்டாக உள்ளது. தற்போது வரை அது சரி செய்யப்படாமலேயே உள்ளது.

தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விடுதியில் புதிதாக சேர்ந்துள்ளனர். இதனால் மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அடிப்படைத் தேவையான தண்ணீரை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story