நீர்விளையாட்டு, படகு சவாரி அமைக்கப்படும்
அரியமான் கடற்கரையில் நீர் விளையாட்டு, படகு சவாரி அமைக்கப்படும் என மண்டபம் யூனியன் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பனைக்குளம்,
அரியமான் கடற்கரையில் நீர் விளையாட்டு, படகு சவாரி அமைக்கப்படும் என மண்டபம் யூனியன் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சாதாரண கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிப்புளியில் உள்ள யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆணையாளர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முரளிதரன், மண்டபம் யூனியன் துணைத்தலைவர் பகவதி லட்சுமி முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அலுவலக உதவியாளர் சரவணன் செலவின பட்டியல் குறித்து வாசித்தார். மேலும் தாமரைக்குளம், புதுமடம், அழகன்குளம், பாம்பன், தங்கச்சிமடம். ராமேசுவரம், மானாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்த பணிகளின் விவரங்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்களின் விவாதங்கள் நடைபெற்றன.
படகு சவாரி
இதைத்தொடர்ந்து ராமநாதபுரத்தில் முக்கியத்துவம் பெற்ற அரியமான் கடற்கரை பீச் மற்றும் பிரப்பன் வலசை கடற்கரை பகுதியில் கடல் சுற்றுலா மேம்பாடு செய்து படகு சவாரி, கடல் நீர் விளையாட்டு பொழுதுபோக்கு, திறந்த வெளி முகாம், வாகன நிறுத்துமிடம் அமைத்து சுற்றுலா தலமாக்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மேலும் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தை கூடுதல் நவீன கட்டமைப்பு வசதிகள் உருவாக்கி அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்திட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்
இக்கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகர், செந்தில்குமார், கோட்டை இளங்கோவன், ரத்தினம், கலை அமுதம் உள்பட ஒன்றிய பொறியாளர்கள் கலந்து கொண்டு கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆர்.ஜி.மருதுபாண்டியன், முருகன், ஆறுமுகம், நித்தியா, பாதம் பிரியாள், சபியா ராணி, பேச்சியம்மாள், சுகந்தி, அஜ்மல் சரிபு, மாரியம்மாள், தவுபிக் அலி, அலெக்ஸ், லட்சுமி, டிரோஸ், உஷா லட்சுமி, பேரின்பம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் முடிவில் யூனியன் மேலாளர் சோமசுந்தர் நன்றி கூறினார்.