குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்

குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்
காங்கயம்
காங்கயம் பஸ்நிலைய வளாகத்தில் உள்ள வணிக வளாகத்தில் பூக்கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கடைகள் சென்னிமலை சாலையில் அமைந்துள்ளது. இந்த கடைக்காரார்கள் தங்களுக்கான எல்லையை தாண்டி, போட்டி போட்டு கொண்டு கடைகளை பல அடி வரை சாலையில பரப்பி வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் ஏற்கனவே சென்னிமலை சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும். வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் பூக்கடைகளில் விற்கப்படும் பூ, மற்றும் பூ மாலைகள் வாடாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் தெளித்து வருவதாலும், அங்கேயே கழிவுநீரை கொட்டி விடுவதாலும், அந்த கழிவு நீர் அனைத்தும் கடைகளின் முன்பு நெடுகிலும் தேங்கி குளம் போல் நிற்கிறது. போதுமான வடிகால் இல்லாததால் சாலையோரம் நீளமாக கால்வாய் போல செல்கிறது. இதனால் கழிவுநீர் சாலையில் நடந்து செல்வோர் மீது பட்டு ஆடைகளை அசுத்தப்படுத்தி விடுகிறது.
முக்கியமாக சென்னிமலை சாலையில் இருந்து பஸ்நிலைய நுழைவு வாயிலில் செல்லும் பயணிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை தாண்டி செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசு உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-----






