மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,707 கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,707 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்
தண்ணீர் திறப்பு குறைப்பு
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் போதிய தண்ணீர் இல்லை எனக்கூறி அம்மாநில அரசு தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தியது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. எனினும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர்
இதற்கிடையே மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 507 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. இந்த நிலையில் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதாவது நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,707 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 42.49 அடியாக உள்ளது.